பீகார் முதற்கட்ட தேர்தல் - 64.66% வாக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

விறுவிறுப்பாக நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதில், 64 புள்ளி 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 5 கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன.  

இந்நிலையில், 121 தொகுதிகளை உள்ளடக்கிய 18 மாவட்டங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் முதியவர்கள் முதல் இளைஞர்கள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றினர். பாதுகாப்பு காரணங்களால் பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி போட்டியிடும் தாரப்பூர் தொகுதி, மஹிஷி, முங்கர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளில் சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. 

பீகார் முதற்கட்ட தேர்தலில் 64 புள்ளி 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 62 புள்ளி 57 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது பீகார் சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Night
Day